தி.மு.க.அரசு ெபாறுப்பேற்றபின் ரூ.4,250 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு
தி.மு.க.அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி மதிப்புள்ள அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தி.மு.க.அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி மதிப்புள்ள அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ரூ.4,250 கோடி சொத்து மீட்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அம்மணி அம்மன் மடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டது. இன்று சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கு பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அம்மணி அம்மன் மடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும், சங்கர வேணுகோபால சுவாமி கோவிலிலும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த 2 கோவில்களிலும் உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 குளங்களை புனரமைக்கவும், அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தமிழக முதல்- அமைச்சர் வழிகாட்டுதலோடு மீட்கப்பட்டு உள்ளது.
அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது. இந்த மீட்பு வேட்டை தொடரும்.
திருப்பதிக்கு நிகராக...
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் இடங்கள் இல்லாமல் பக்தர்கள் பயன்பாட்டிற்கும், கோவில்கள் வருமானங்களை ஈட்டுகின்ற நிலையை உருவாக்குகின்ற பணியில் இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது.
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் அம்மணி அம்மன் மடம் புதுப்பிக்கப்படுவதுடன் மீதமுள்ள காலியிடத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டுமோ அதை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோன்று 4 கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு என்று நேரம் ஒதுக்குவதற்கு சட்டமன்ற கூட்டத் தொடரில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் திருவண்ணாமலை கோவிலும் ஒன்றாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள்.
இதுகுறித்து சிறப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிசீலித்த பின்னர் விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.