மோசடி செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் மீட்பு


மோசடி செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் மீட்பு
x

அமெரிக்கா செல்ல விசா வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர், வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இணையதளம் மூலம் இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கார்த்திகேயனுக்கு அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

மேலும் விசா செலவுக்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய கார்த்திகேயன், அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் மர்மநபர் கூறியபடி விசா பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து அவரை இணையதளம் மூலம் கார்த்திகேயன் தொடர்புகொள்ள முயன்ற போது, தன்னிடம் மர்ம நபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் அந்த பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்ட போலீசார், அந்த வங்கி கணக்கின் பண பரிவர்த்தனையை முடக்கினர். மேலும் கார்த்திகேயன் செலுத்திய தொகையையும் மீட்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கார்த்திகேயனிடம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று வழங்கினார்.


Next Story