திருக்கோவிலூர் அருகே மாயமான சிறுவன் குட்டையில் பிணமாக மீட்பு


திருக்கோவிலூர் அருகே மாயமான சிறுவன் குட்டையில் பிணமாக மீட்பு
x

திருக்கோவிலூர் அருகே மாயமான சிறுவன் குட்டையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். அவனது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம், விவசாயி. இவருக்கு 4½ வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருந்தான்.

கடந்த 13-ந் தேதி சிறுவன், தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை. அவனை பல்வேறு இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் வெற்றிவேலை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. பின்னர் இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் அதே ஊரில் காசிலிங்கம் வீட்டின் அருகில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் வெற்றிவேல் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. அதன்பேரில் அவனது குடும்பத்தினர் விரைந்து சென்று வெற்றிவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர்மக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் சாவுக்கு காரணம் அதே ஊரில் பேய் ஓட்டுவதற்காக வந்த மர்ம ஆசாமியாக இருக்கலாம், எனவே இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போராட்டக் காரர்களிடம் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story