108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
108 ஆம்புலன்ஸ் டிரைவர்
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறையில் கச்சேரி சாலை தீயணைப்பு நிலையம் எதிர்புறம் உள்ள தனியார் சமுதாய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
டிரைவருக்கு உண்டான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 வழங்கப்படும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன், மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளர்
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்சி (நர்சிங்) மற்றும் இது தொடர்பான பட்டப் படிப்பு டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.15,435 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூறு இயல் முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும் மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு நடைபெறும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.