காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்,
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 24-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், அன்று இரவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 26-ந் தேதி பாசனத்திற்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு அன்று இரவு முதல் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இந்த நிலையில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 249 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.