இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கிய நோக்கம் மற்றும் தன்னார்வலர்களுக்காக மாவட்ட அளவில் வழங்கிய முக்கிய கருத்துக்களையும் கூறினார். வாணியம்பாளையம் ஆனந்தா நடுநிலைப்பள்ளி ஆசிரியை சரசு, ஆசிரியை சுமித்ரா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கியதற்கான முக்கிய காரணம், மழலைச்செல்வங்களை கையாளும் விதம், மாணவர்களுக்கான பாடத்திட்ட வரைவு முறைகள் குறித்து எடுத்துக்கூறினார். மேலும் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலமாகவும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர். பயிற்சியின் நிறைவில் தன்னார்வலர்களுக்கு கற்றல், கற்பித்தல் துணைக்கருவிகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர் நிர்மலா செய்திருந்தார்.