சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க மறுப்பு-மது பிரியர்கள் அதிர்ச்சி
சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பனமரத்துப்பட்டி:
2000 ரூபாய் நோட்டுகள்
நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில் இந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதே நேரத்தில், புழக்கத்தில் உள்ள அத்தகைய நோட்டுகள் செல்லும் எனவும், வரும் 23-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில்...
இந்நிலையில், சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு வங்கியில் பணம் செலுத்தும்போது தங்களது டினாமினேஷனில் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கக் கூடாது. ஆகையால் இனிவரும் காலங்களில் கடைகளில் வாடிக்கையாளரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை பெற வேண்டாம் என்று மாவட்ட மேலாளர் உத்தரவுக்கிணங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மது பிரியர்கள் அதிர்ச்சி
இதைதொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் கடையில் மது பிரியர்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.