வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தகுதியானவர்கள் பெயர் சேர்க்க மறுப்பு


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தகுதியானவர்கள் பெயர் சேர்க்க மறுப்பு
x

பொன்னமராவதி அருகே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தகுதியானவர்கள் பெயர் சேர்க்க மறுப்பதாகவும், உரிமை தொகை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பெண்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

பெயர் சேர்க்க மறுப்பு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் எங்களது பெயரை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க மறுக்கின்றனர். தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயர் அந்த பட்டியலில் உள்ளது. எனவே உரிய ஆய்வு நடத்தி தகுதியான நபர்களை வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தகுதியற்ற நபர்களை நீக்க வேண்டும் என மனு அளித்தனர்.

உரிமை தொகை விண்ணப்பம்

மேலும் மனு கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில், பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படுவதாக தொடர்பாக அரசு அறிவித்துள்ளது. இதில் இந்த தொகையை பெற யார்-யார்? தகுதியுடையவர்கள் என வெளியிட்டுள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது. அப்படி இருக்கையில் இந்த பட்டியலில் எங்களது பெயர் விடுபட்டுள்ளது. அதனால் தகுதியான எங்களது பெயரை மறுப்பு தெரிவிக்காமல் சேர்க்க கோரியும், தகுதியற்றவர்களின் பெயரை நீக்கவும், புதிய பட்டியலை வெளியிடவும் வலியுறுத்துகின்றோம் என்றனர்.

நடன கலைஞர்கள் மனு

தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து நிர்வாகிகள் கூறுகையில், கோவில் திருவிழாக்களில் மேடை நடன நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி பெற போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.53 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த தொகை பெறப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த தொகையை செலுத்தினால் தான் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேடை நடன நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு ஊதியம் மற்றும் ஒளி, ஒலி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கான செலவு தொகையை ஒப்பிடுகையில் அனுமதி பெறுவதற்காக தொகை அதிகமாக உள்ளது. இந்த தொகையை நீக்கி நடன நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதேபோல பொதுமக்கள் பலர் கூட்டத்தில் மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

காசோலை

கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகை கடை, உணவகம், தையற்கடை, ஜெராக்ஸ்கடை, பாலகம் உள்ளிட்டவைகளை அமைக்க ரூ.8.40 லட்சம் மதிப்பில் நுண்நிறுவன நிதிக்கான காசோலைகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story