கத்தாழை, வீரமுடையாநத்தம், கீழ்வளையமாதேவியில்என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுப்புகிராம சபை கூட்டத்தில் இருந்து மக்கள் வெளிநடப்பு
கத்தாழை, வீரமுடையாநத்தம், கீழ்வளையமாதேவியில் என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் கிராம சபை கூட்டத்தில் இருந்து மக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் கத்தாழை ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாலு வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சதா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கத்தாழை, கரிவெட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், நாங்கள் கொடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றனர். அதில், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்துள்ளவர்களுக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். முழு இழப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என்றும், இந்த கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்குமாறும் அதிகாரி கூறினார். உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3-வது சுரங்கத்துக்கு எதிர்ப்பு
புவனகிரி ஒன்றியம் வீரமுடையாநத்தம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் செல்வராசு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சுரேஷ் வரவேற்றார். இதில் இளநிலை உதவியாளர் கருணாநிதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரண்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் ரஜினிவளவன், மக்கள் அதிகாரம் மணியரசன் மற்றும் கிராம மக்கள் என்.எல்.சி. 3-வது சுரங்கம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று அதிகாரி கூறியதால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு
கீழ்வளையமாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செம்புலிங்கம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரியா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம மக்கள், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என்றனர். ஆனால் தீர்மானத்தை நிறைவேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்து விட்டார். இதனால் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர்.