வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு; கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மேற்கொண்டார்
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர் கனமழையாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மண்டல அதிகாரிகள் மற்றும் தாசில்தார்களிடம் அறிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்வாரியத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி மற்றும் பேரூராட்சித்துறை ஆகிய துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
திட்ட மதிப்பீடு
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அடுக்கப்பட்ட மணல் மூடைகள் போக பாதிக்கப்பட்ட மீதமுள்ள இடங்களிலும் தற்காலிகமாக மணல் மூடைகள் அடுக்கவும், வாய்கால்களில் நீர் தடையின்றி போக ஆகாய தாமரைகள் மற்றும் மரக்கிளைகள், செடிகளை அகற்றவும், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வாய்க்கால்களை ஆழப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தரமாக தீர்வு ஏற்பட தடுப்புச்சுவர் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து விரைந்து பணிகளையும் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், பேரிடர் தாசில்தார் வினோத் மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வடிகால் வசதி
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வடகிழக்கு பருவமழையில் அதிகமாக ஓடும் நீரை பண்ணை குட்டைகள் மூலம் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். வயலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும். தென்னந்தோப்பில் முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையவுள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை புயல் தொடங்குவதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.