வட்டார அளவிலான கலைத்திருவிழா
செய்யாறில் வட்டார அளவிலான கலைத்திருவிழாவை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வட்டார அளவிலான கலைத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பள்ளி அளவில் நடந்த கலைத்திருவிழாவில் 6-ம் வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஓவியம், நடனம், இசைக்கருவி வாசித்தல் உள்ளிட்ட தனி திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழாவில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் செய்யாறு வட்டார அளவிலான பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியினையும் அத்துறையை சார்ந்த ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு செய்தனர். வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன், வட்டார வளமை மேற்பார்வையாளர் (பொறுப்பு) பூச்செண்டு உள்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பரசுராமன் நன்றி கூறினார்.