பாதுகாப்பில்லாத சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்


பாதுகாப்பில்லாத சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்களை இணைத்து தனி தாலுகாவாக சுமார் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டு தாலுகாவுக்கும் உள்ள சொத்துக்களின் பத்திர பதிவுகள் மற்றும் அனைத்து பதிவுகளுக்கும் சார்பதிவாளர் அலுவலகம் சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெரு எல்லையில் பாலாற்று அருகில் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.55 லட்சம் செலவில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள இந்த சார்பதிவாளர் கட்டிடத்தில் சமீப காலங்களாக சமூக விரோதிகள் புகுந்து ஜன்னல்களை உடைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மழை நீர் உள்ளே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் உடைந்த ஜன்னல்கள் வழியாக மழைநீர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் உள்ள கோப்புகள் அனைத்தும் நனையும் சூழ்நிலை உள்ளது. அதேபோல கணினி உள்ளிட்டவைகளும் மழை நீரால் நனைந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அலுவலகத்தை சுற்றி புதர்மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story