கிராமப்புறங்களில் சிக்னல் கிடைக்காததால் இணைய வழிப்பதிவில் சிக்கல்


கிராமப்புறங்களில் சிக்னல் கிடைக்காததால் இணைய வழிப்பதிவில் சிக்கல்
x

கிராமப்புறங்களில் சிக்னல் கிடைக்காததால் இணைய வழிப்பதிவில் சிக்கல்

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சரியான சிக்னல் கிடைக்காத நிலையால் இணைய வழிப் பதிவு மேற்கொள்வதில் வேளாண்மைத்துறையினர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

உணவு தண்ணீர் இல்லாமல் கூட இருக்க முடியும்.ஆனால் இணையம் இல்லாமல் சில மணி நேரங்கள் கூட இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு நமது வாழ்வில் இணையம் தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது.விஞ்ஞான வளர்ச்சியால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சில வினாடிகளில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை ஒப்பிடும்போது இணையத்தின் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது.இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஆண்டிராய்டு போன்களேயாகும்.கொரோனா தாக்குதல் ஆரம்பித்த பிறகு கல்வி உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இணையம் அவசியமாகி விட்ட நிலையில் இதன் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது.இது இணையம் சார்ந்த வேலை வாய்ப்புகள், வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது.மேலும் அரசு சார்ந்த பல பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது.

களப்பணியாளர்கள்

பல அரசுத்துறைகளில் களப் பணியாற்றும் அலுவலர்களின் பணிகளைக் கண்காணிக்கவும் இணையம் கைகொடுக்கிறது.அந்தவகையில் வேளாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறையினர் களப் பணிக்குச் செல்லும் போது ஜிபிஎஸ் பயன்படுத்தி தங்கள் இருப்பிடத்தைப் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக காவல்துறையினர் ரோந்துப் பணிக்குச் செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள நோட்டுப் புத்தகத்தில் நேரம் பதிவு செய்து கையெழுத்து போடுவார்கள். ஆனால் இப்போது ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரம், இடம் உள்ளிட்டவற்றுடன் போட்டோ எடுத்து அதனை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் களப் பணியாளர்களாக உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்ளனர்.இவர்கள் குறிப்பிட்ட சில அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்று சேர்ந்ததும் நேரடியாக அந்த விளைநிலத்துக்குச் சென்று ஜிபிஎஸ் மூலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஆனால் பல கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் சிக்னல் கிடைக்காததால் இணையம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய முடியாமல் திணறும் அலுவலர்கள் உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுகிறது.

உழவன் செயலி

தற்போது விவசாயிகளுக்கான திட்டங்களைப் பெறவும் தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவும் உழவன் செயலியை பல விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.மேலும் அரசுத்துறைகள் சார்ந்த பல தேவைகளுக்கும் இணைய வழியைப் பயன்படுத்தி விண்ணப்பித்து வருகிறார்கள்.இதனால் கிராமப்புறங்களிலும் இணையப் பயன்பாடு அத்தியாவசியமாகி விட்டது.எனவே கிராமப்புறங்களில் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணையம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story