மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யசிறப்பு முகாம்கள் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள்கலெக்டர் பழனி ஆய்வு
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பி.என்.தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி, எம்.ஆர்.ஐ.சி. பள்ளி, கீழ்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளி, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும்பொருட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று மாலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகாத வகையில் அவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி, இடவசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என பார்வையிட்டார். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் எவ்வித சிரமமின்றி தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.