பணியாளர்கள் வருகை செயலி மூலம் பதிவு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாளர்கள் வருகை செயலி மூலம் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இத்திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும்,
அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் பதிவாகும் வகையில் செயலி வாயிலாக 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள பணிகளில் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய, மாநில அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் (தனிநபர் திட்டப்பணிகள் தவிர) இணையதளத்தில் பதிவாகும் வகையில் செயலி வாயிலாக வருகையினை பதிவு செய்தல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.