சீராக குடிநீர் வழங்க வேண்டும்


சீராக குடிநீர் வழங்க வேண்டும்
x

வளையாம்பட்டு பகுதியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஒன்றியக்குழு கூட்டம்

ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

உறுப்பினர் வேண்டாமணி: ஒரு புறம் வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், மற்றொரு பக்கம் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் துர்நாற்றம் இதனால் கிரிசமுத்திரம் பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சதாசிவம்:- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி பணியிடங்கள் எத்தனை உள்ளது. அதனை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அலுவலக வளாகத்தில் உள்ள காய்ந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பழுதாகி உள்ள குப்பைகள் அள்ளும் வாகனங்களை சீர் செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு கூட்டத்திற்கு கூட வரவில்லை. அவர்கள் மீது கலெக்டரிடம் புகார் செய்யுங்கள்.

சீராக குடிநீர்

காயத்ரி பிரபாகரன்:- ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேர்க்கடலை பயிரிட்டு வருகின்றனர். கடலை பறிக்கும் போது பாதிக்கு மேல் கூலி செலவாகி விடுகிறது. ஆகையால் வேர்க்கடலை பறிக்க இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு தர ஏற்பாடு செய்ய வேண்டும். வட்டார பகுதிகளில் விதைகள், தானியங்கள், காய்கறிகளை பதப்படுத்திவைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கங்காதரன்:- வளையாம்பட்டு ஊராட்சி லாலா ஏரி பகுதியில் குடிநீருக்காக ரூ.15 லட்சம் செலவில் கிணறு வெட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்தி:- வளையாம்பட்டு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. கால்வாய் சரிவர தூர் வாரப்படுவதில்லை. சீரான குடிநீர் வழங்கவும், கால்வாய் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன்:- கொத்தக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள சமுதாய கூடம் கட்டிட பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். செக்குமேடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


Next Story