பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற உறவினர் கைது
திசையன்விளை அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் பிணமாக கிடந்த பெண்
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் ஜான்ஷா பீவி (வயது 48). விவாகரத்து ஆன இவர் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜான்ஷா பீவி நீண்ட நேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, அவர் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல், சங்கிலி ஆகியவை மாயமாகி இருந்தது. மேலும் காதில் ரத்தக்கரையும் இருந்தது. இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜான்ஷா பீவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கழுத்தை நெரித்து கொலை
இந்த நிலையில் ஜான்ஷா பீவி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அவரது உறவினரான அப்துல்காதர் (45) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், தனிப்பிரிவு ஏட்டு நந்தகோபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஜான்ஷா பீவியை நகைக்காக அப்துல் காதர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதாவது, பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் நடந்த கந்தூரி விழாவிற்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு ஜான்ஷா பீவி வீட்டுக்கு அப்துல்காதர் சென்றார். அங்கு தனியாக இருந்த ஜான்ஷா பீவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.
நகை மீட்பு
மேலும் அந்த நகைகள் திசையன்விளை-நாங்குநேரி ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகில் ஒரு மரத்தடியில் மண்ணில் புதைத்து வைத்து இருந்தார். அதையும் போலீசார் மீட்டனர்.