உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2023 1:27 AM IST (Updated: 26 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி இறந்த கட்டிட தொழிலாளியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி இறந்த கட்டிட தொழிலாளியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

கட்டிட தொழிலாளி

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் நடுவப்பட்டியை சேர்ந்தசதுரகிரி மகன் மாரிமுத்து (வயது 31). இவர் கட்டிட தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சக தொழிலாளர்களுடன் நேற்று முன்தினம் தனது வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்ட போது தாழ்வாக சென்ற மின்வயரால் எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மாரிமுத்துவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறுப்பு

அப்போது மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இறந்த மாரிமுத்துவின் மனைவிக்கு அரசு வேலையும், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையும் கேட்டு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தேவா, முருகன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் அதிகாரிகள் அரசு வேலைக்கு உத்தரவாதம் கொடுக்க தயங்கியபோது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்த சிவகாசி தாசில்தார் லோகநாதன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் நிவாரண தொகைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அரசு வேலை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்தார். அதன் பின்னர் மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.


Next Story