கர்ப்பிணி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


இரணியல் அருகே தற்கொலை செய்த கர்ப்பிணி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இரணியல் அருகே தற்கொலை செய்த கர்ப்பிணி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணி தற்கொலை

இரணியல் அருகே பரசேரி பகவத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35), கொத்தனார். இவருடைய மனைவி சுபா லட்சுமி (25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. தற்போது சுபா லட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுபா லட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓணம் பண்டிகையையொட்டி வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. சுபா லட்சுமி பலமுறை அய்யப்பனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். எனினும் அவர் போனை எடுத்துப் பேசவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுபா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே சுபா லட்சுமி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு உறவினர்கள் திரண்டு வந்தனர்.

அப்போது திடீரென சுபா லட்சுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். சுபா லட்சுமியின் தற்கொலைக்கு அவருடைய கணவர் அய்யப்பன் தான் காரணம் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

உடன்பாடு

இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சுபா லட்சுமியின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story