போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
x

கொலையாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கொலையாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

கொலை செய்யப்பட்ட ஏசுதாசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் திடீரென அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும். இங்கிருந்து எழுந்து செல்ல மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனைவி பரபரப்பு புகார்

இதுதொடர்பாக ஏசுதாசனின் மனைவி கூறுகையில், "என் கண் முன்னே என் கணவரை கொலை செய்தனர். என் கணவரை குத்திய கத்தியில் இருந்து ரத்த கறையை கொலை செய்தவர் ஆடையில் தேய்த்தபடி அங்கிருந்து சென்றார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. அவரால் ஏசுதாசனுக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தோம். ஆனால் போலீசார் அலட்சியமாக பதிலளித்தனர். எத்தனையோ முறை புகார் அளித்தோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த புகார் தொடர்பாக முன்கூட்டியே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் என்னுடைய கணவரின் உயிர் போயிருக்காது. போலீஸ் அலட்சியம் காரணமாக கொலை நடந்தது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்" என்றார். இதேபோல் உறவினர்களும் ஆவேசமாக பேசினர்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமாரி, ஜெயலட்சுமி, உமா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதனையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் உடனே அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "பெண் விஷயத்தில் இந்த கொலை நடந்துள்ளது. எனவே போலீஸ் விசாரணையை தவறாக பேசக் கூடாது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக எழ தொடங்கினர். அந்த சமயத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அங்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது "கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்" என கேட்டுக் கொண்டார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story