உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த பணியாளரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த பணியாளரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழாநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அரவிந்த்ராஜ் (வயது 22). இவர் கடந்த 2 ½ வருடமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழையாறு சுனாமி நகர் அருகில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உயிரிழந்த அரவிந்த்ராஜ் உடலை உறவனர்களிடம் ஒப்படைக்க முயன்றனர்.

சாலை மறியல்

அப்போது ஆனந்தராஜின் உறவினர்கள் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை பெற மாட்டோம் எனக் கூறி மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது போராட்டக்காரர்கள் உதவி கலெக்டர் அல்லது தாசில்தார் நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தால் தான் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெறுவோம் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதால் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story