லாரி டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
வேதாரண்யம் அருகே விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமாக லாரி டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமாக லாரி டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி மோதி 2 பேர் பலி
வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி மீனவர் காலனி சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது விழுந்தமாவடி எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்ற போது எதிரே ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விஜய்யும், சத்தியமாலாவும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வேட்டைக்காரணிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வேட்டைக்காரணிப்பு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஏற்றி சென்று விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வேட்டைக்காரணிப்பு போலீஸ் நிலையம் முன்பு திரண்டு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.லாரி டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாகை - வேதாரண்யம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.