போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
விருத்தாசலத்தில் ஓட்டலில் பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை என கூறி போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த எருமனூர் வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெம்புலிங்கம் மனைவி தனபாக்கியம் (வயது 62). இவர் விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஓட்டல் மாடியில் மர்மமான முறையில் தனபாக்கியம் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தனபாக்கியம் ஓட்டல் மாடியில் குரங்குகளை விரட்டும் போது மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து தனபாக்கியத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாக்கியம் சாவுக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
முற்றுகை
இந்நிலையில் தனபாக்கியம் சாவில் மர்மம் உள்ளது. அவர் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. எனவே தனபாக்கியம் சாவுக்கு நியாயம் வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் அந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டல் பூட்டப்பட்டிருந்ததாலும், போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வராததாலும் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென தென்கோட்டை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தனபாக்கியம் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இது பற்றி போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என கூறி போலீசாரை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
நடவடிக்கை
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தனபாக்கியம் சாவுக்கான உண்மை காரணம் என்ன என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் தனபாக்கியத்தின் உடலை வாங்க மாட்டோம் என கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.