இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்


இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
x

நாட்டறம்பள்ளி அருகே இளம் பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக்கூறி பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே இளம் பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக்கூறி பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுவேதா (வயது 22). இவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திம்மாம்பேட்டை போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சாலை மறியல்

அப்போது சுவேதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் கத்தாரி கிராமத்திலிருந்து சாலை வசதி இல்லாத காரணத்தால் சுவேதாவின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி வந்து நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுவேதாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் இது குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த மறியலில் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story