பக்தர்களின் உடலில் சேறு பூசி துடைப்பத்தால் அடித்த உறவினர்கள்
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில், பக்தர்களின் உடலில் சேறு பூசி துடைப்பத்தால் உறவினர்கள் அடித்த வினோத நிகழ்ச்சி நடந்தது.
வினோத நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தீத்தாகிழவனூரில் சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில்களின் உற்சவ விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மன் வீதி உலா, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று, சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடந்தது. அதன்படி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், தங்களது முகத்தில் வர்ணப் பொடிகளால் வேடமிட்டனர். இவர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
செருப்பு மாலை
இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது உடலில் சேறு, கரி போன்றவற்றை பூசிக்கொண்டு கோவில் முன்பு அமர்ந்தனர். இவர்களுக்கு, உறவினர்கள் செருப்பு மாலை அணிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து துடைப்பம் மற்றும் செருப்பில் தொட்டு ஒவ்வொருவர் தலையிலும் அடித்து, கால்களால் உதைத்தனர். அதன்பிறகு பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடனை முடித்தனர்.
இதனையடுத்து அம்மன் பூஞ்சோலை சென்று அடைதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கூறுகையில், உடலில் சேறு பூசிக் கொள்வதால் கோடைக்காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும். மேலும் துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி, சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழிவகை ஏற்படும் என்றனர்.