கன்னியாகுமரியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சமையல்காரரின் உறவினர்கள்
தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி சமையல்காரரின் உறவினர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி சமையல்காரரின் உறவினர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சமையல்காரர்
பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 37). இவர் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்து, ரத வீதியில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் சங்கரபாண்டி வேலையை முடித்துவிட்டு சம்பளம் வாங்கி கொண்டு ஊருக்கு செல்வதாக லாட்ஜுக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காக உடன் வேலை செய்பவர் லாட்ஜுக்கு சென்று அறைக் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது சங்கரபாண்டி வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்கரபாண்டி சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் சங்கர பாண்டி இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
சங்கரபாண்டி மனைவி செல்வி கதறி அழுதபடி, என் கணவர் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரபாண்டி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்தநிலையில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் செல்வி ஒரு புகார் கொடுத்தார். அதில் 'என் கணவர் சங்கரபாண்டியை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.