கொலையான தொழிலாளியின் உறவினர்கள் திடீர் சாலைமறியல்; அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி கொலை
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38), தொழிலாளி. இவரை கடந்த 10-ந்தேதி ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கடந்த ஆண்டு கோவில் பூசாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவிக்கும், மாயாண்டியின் மனைவிக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது.
சாலை மறியல்
மாயாண்டியின் குடும்பத்தினர், உறவினர்கள், யாதவர் மகாசபை மாநில இளைஞர் அணி செயலாளர் பொட்டல்துரை மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை நெல்லை அறிவியல் மையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்து வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கொக்கிரகுளம் சாலையில் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், நெல்லை சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு பஸ்சை வழிமறித்து சிலர் கையால் தாக்கியதில் பஸ் கண்ணாடி உடைந்தது. உடனே போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.
பேச்சுவார்த்தை
அங்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கலெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் மாயாண்டியின் மனைவி மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அதில், அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.