சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல்


சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல்
x

சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதி பெண் இறந்தார். அவரது உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலை நசுங்கி சாவு

குத்தாலம் தாலுகா வடக்காஞ்சிவாய் பேராவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ராசாத்தி(வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். நேற்று கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூர் கீழ சேத்தி மெயின் ரோட்டில் ராசாத்தி தனது கணவர், மகனுடன் ஸ்கூட்டரில் உறவினர் திருமணத்திற்கு புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜாத்தி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் நிற்காமல் சென்று விட்டது. ஜெயக்குமாரும், 4 வயது குழந்தையும் காயம் இன்றி தப்பினர்.

சாலைமறியல்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ராசாத்தி உடலை சாலையில் வைத்து டிராக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரேகா ராணி, ராஜேஷ் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியல் கைவிடப்படவில்லை. பின்னர் டிராக்டர் டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து ராசாத்தி உடல் பிரேதபரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் அந்தபகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story