திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல்


திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 14 Sept 2023 2:00 AM IST (Updated: 14 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பெண் பலியானதால் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மனைவி நாகலட்சுமி (வயது 38). நேற்று முன்தினம் இவர், கூவனூத்துவில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தென்னை நார் ஏற்றுவதற்காக அந்த தொழிற்சாலை வளாகத்துக்குள் பின்பக்கமாக வந்த லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கிய நாகலட்சுமி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2.45 மணி அளவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நாகலட்சுமியின் உறவினர்கள் திரண்டனர். அப்போது நாகலட்சுமியின் இறப்புக்கு காரணமான லாரி டிரைவர் கைது செய்யப்படாத தகவல் அவர்களுக்கு கிடைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த நாகலட்சுமியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாகலட்சுமியின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனே கைது செய்ய வேண்டும். நாகலட்சுமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாகலட்சுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story