சுடுகாட்டில் மூதாட்டியை விட்டுச் சென்ற உறவினர்கள்
களக்காட்டில் சுடுகாட்டில் மூதாட்டியை விட்டுச் சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் நேற்று மூதாட்டி ஒருவர் கட்டிலுடன் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் விசாரித்தனர்.
அந்த மூதாட்டி களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த இசக்கியம்மாள் (வயது 80) ஆவார். அவரது கணவர் ஆறுமுகம் இறந்து விட்டதால், அவரை மகன் கந்தசாமி பராமரித்து வந்தார். இந்நிலையில் அவரும் உயிரிழந்ததால், கந்தசாமியின் இருமனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர். இதற்கிடையே நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி கக்கன் நகர் மூணாற்று பிரிவில் உள்ள சுடுகாட்டில் விட்டுச் சென்று விட்டனர். இதனால் உணவுக்கு வழியின்றி அவர் தவித்தது தெரியவந்தது. இதுபற்றி களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி விரைந்து வந்து மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது உறவினர்கள் மூதாட்டியை வீட்டில் ஏற்க மறுத்தனர். இச்சம்பவம் அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து ஊர் பெரியவர்கள் முன்பு நாங்கள் இவருக்கு தினமும் உணவு அளித்து எங்கள் குடும்பத்தாரை போல் கவனித்துக் கொள்கிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னரே போலீசார் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.