மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூர்:

16 கண் மதகுகள்

மேட்டூர் அணை கடந்த 16-ந் தேதி முழு கொள்ளளவை (120 அடி) எட்டி நிரம்பியது. அன்று காலை முதல் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்ததால், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. அதாவது 9 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 19 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.


Next Story