'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம்
‘ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
சென்னை,
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தொழில் அதிபர் விரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பங்களாவில் பிரமாண்டமாக நடந்தது. தலைமுறை தலைமுறையாக குஜராத்திய இந்து குடும்பங்களில் பின்பற்றப்படும் மரபுகளின் படி இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மோதிரம் மாற்றினர்
பாரம்பரிய முறைப்படி ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா அம்பானி தனது குடும்பத்தினருடன் விரேன் மெர்ச்சன்ட் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினரையும், ராதிகாவையும் முறைப்படி அழைத்து வந்தார்.
மணமகள் வீட்டார் பரிசுப்பொருட்கள், இனிப்புடன் மணமகன் வீட்டுக்கு வந்தனர். இரு குடும்பத்தினரும் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொண்டனர்.
இதன்பின்பு திருமண ஜோடிகள் கிருஷ்ணரை வணங்கி விட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தனர். விநாயகர் பூஜையோடு திருமண அழைப்பிதழ் வாசிக்கப்பட்டது.
பின்னர், மணமக்கள் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பெரியோர்களிடம் அவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.
நடன நிகழ்ச்சி
விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அம்பானி குடும்ப உறுப்பினர்களின் நடன நிகழ்ச்சி நீத்தா அம்பானி தலைமையில் நடந்தது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள் என முக்கிய பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர்.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துள்ள ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் ஆற்றல் வணிகத்தையும் கவனித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள ராதிகா மெர்ச்சன்ட், என்கோர் ஹெல்த்கேர் மருந்து நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.