மராட்டியத்தில் கிரேன் விழுந்ததில் இறந்தகிருஷ்ணகிரி என்ஜினீயர் குடும்பத்துக்குரூ.3 லட்சம் நிவாரணம் நிதிகலெக்டர் சரயு வழங்கினார்
கிருஷ்ணகிரி:
மராட்டிய மாநிலத்தில் சாலை பணியின்போது கிரேன் விழுந்து இறந்த கிருஷ்ணகிரி என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் பொது நிவாரண நிதியை கலெக்டர் சரயு வழங்கினார்.
என்ஜினீயர் பலி
மராட்டிய மாநிலம் மும்பை- நாக்பூர் இடையே 701 கி.மீட்டர் தொலைவிற்கு சம்ருதி மகா மார்க் எக்ஸ்பிரஸ் சாலை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. 3-ம் கட்டமாக 100 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடந்தது. இதன் ஒரு பகுதியாக பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் என்ஜினீயரான சந்தோஷ் (வயது 36) என்பவரும் இறந்தார். இவரது உடல் கடந்த 2-ந் தேதி கொண்டு வரப்பட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நிவாரண நிதி
இந்த நிலையில் சந்தோஷ் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் சந்தோஷ் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி ரூபியை சந்தித்து பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது கலெக்டர், சந்தோசின் மனைவியிடம் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என ஆறுதல் கூறினார். அப்போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.