வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்
ராமநாதபுரம்
கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் சுமார் 98 ஆயிரத்து 314 எக்டர் நெல் பயிரும், 40 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரும் 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டு பாதிப்படைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பரப்பினை வருவாய் கிராம வாரியாக வருவாய்துறை மற்றும் வேளாண்மை துறையினருடன் கள ஆய்வு செய்து கணக்கெடுப்பு செய்து அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் ரூ.132.71 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து வட்டாரங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மைத்துறையின் மூலமாக விவசாயிகளுக்கு நிவாரண நிதி வரவு வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கிலும் 10 நாட்களுக்குள் படிப்படியாக நிதி வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.