மான்களால் பயிர் பாதிப்புக்கு நிவாரணம்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


மான்களால் பயிர் பாதிப்புக்கு நிவாரணம்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் மான்களால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மான்களால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், விவசாய இணை இயக்குனர் டாம் சைலஸ், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:- மாவட்டத்தில் கால்நடைகள் குறிப்பாக காட்டு மாடுகள், மான்களால் பயிர்கள் அதிகளவில் சேதமடைகிறது. மான்கள் சேதம் குறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தால், மான்கள் உள்ளது. ஆனால் இழப்பீடு வழங்க முடியாது என்று கூறுவதோடு விவசாயத்திற்கு மாற்றாக யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களை வளர்க்குமாறு பதிலளிக்கின்றனர். விவசாயத்தை கைவிடுமாறு வனத்துறையினரே கூறுவது வேதனை அளிக்கிறது. விவசாயம் இல்லாவிட்டால் மக்களின் நிலை என்பதை வனத்துறையினர் மனதில் கொள்ளவில்லை.

சேமிப்பு கிடங்குகள்

மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது போல மிளகாய் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும். நெல் விவசாயிகளிடம் இருந்து முழுமையான அளவில் கொள்முதல் செய்யும் வகையில் போதிய சேமிப்பு கிடங்குகள் வரும் பருவமழைக்கு முன்னதாக ஏற்படுத்த வேண்டும்.

விக்ரபாண்டியபுரம் கண்மாய் கால்வாய்களை வெட்டி தூர்வாரி சீரமைக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் முறையான வழிகாட்டுதல் இல்லை என்று கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மறுக்கின்றனர். பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக ஒருவாரத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். பண்ணை குட்டைகள் வெட்டி பல ஆண்டுகளாகி விட்டதால் மேடாகி விட்டது. அதனை மீண்டும் வெட்டிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசியதாவது:-

தடுப்பு வேலி

மாவட்டத்தில் வனத்துறை தொடர்பான அனைத்து கோரிக்கைகள் குறித்து மாவட்ட வனப்பாதுகாவலரை அழைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மான்களால் பயிர் பாதிப்பு ஏற்பட்டதற்கு நிவாரணம் கிடைக்க வழி இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளால் பயிர்கள் சேதமடையாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story