பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு


பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

தர்மபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 65), சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பழனிம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விவரங்கள் குறித்து தர்மபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன். இந்த விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்துக்கு (52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

ரூ.3 லட்சம் நிவாரணம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story