ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
x

தொடர் மழையால் பாதிகக்ப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் காமராஜ், துணை தலைவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், சங்க செயல் திட்டம் குறித்து விளக்கி பேசினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. மழையால் 100 சதவீதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், பகுதி அளவு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் கடைகளில் யூரியா மூட்டை அதிக விலைக்கு விற்பதுடன் இடுபொருட்களும் சேர்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். உரங்களை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டு காலமாக குறுவை பயிருக்கு காப்பீடு இல்லாமல் உள்ளது. வரும் ஆண்டுகளில் குறுவை பயிருக்கும் காப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஜோதி, கமலக்கண்ணன், செந்தில்குமார், பிரகாஷ், குணசேகரன், ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story