நீரின்றி கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்
கீழையூரில் நீரின்றி கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேளாங்கண்ணி:
கீழையூரில் நீரின்றி கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
கீழையூரியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
செல்வம்(சி.பி.ஐ):- ஒன்றியக்குழு கூட்டத்திற்கு துறை சம்பந்தமான அதிகாரிகள் ஒரு சிலர் மட்டுமே வருகின்றனர். மற்ற துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வருவதில்லை. அதனால் பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய குறுவை பயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் புகாதவாறு...
ஆறுமுகம் (பா.ஜ.க.):- பிரதாப ராமபுரம் ஊராட்சியில் கோவில் தெரு முதல் கடற்கரை சாலை வரை உள்ள சாலையை மழை நீர் ஊருக்குள் புகாதவாறு உயர்த்திட வேண்டும். பிரதாபராமபுரம் ஊராட்சியில் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலை சேதமடையாமல் குழி தோண்டி புதைக்க வேண்டும். மேலும் அங்குள்ள கல்லறை சாலை சேதமடைந்து உள்ளது அதனை சீரமைத்து தர வேண்டும்.
நாகரத்தினம்(தி.மு.க.):- புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு பகுதியில் கோவில் நிலங்களில வசிக்கும் பின் தங்கியவர்களுக்கு அரசு வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும். புதுப்பள்ளியில் சாலைகள் அதிகம் சேதமடைந்துள்ளது. அதனை சீர்செய்து தர வேண்டும்.
குடிநீர் வழங்க நடவடிக்கை
கமலா(அ.தி.மு.க.):- தற்போது சிந்தாமணியில் இருந்து காரப்பிடாகை வரையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக பதித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலை அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், துறை சார்ந்த ஒரு சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.