மீனவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம்
மீனவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் கடற்கரையோர பகுதிகளில் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றன. மேலும் விசைப்படகுகளை பராமரித்தல், வலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நிவாரணம்
இந்த மீன் பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் மீனவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
நிவாரணம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய மீனவர்களுக்கு அத்தொகையை கிடைக்க செய்வார்கள். மேலும் முதியோர் உதவித்தொகை, பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டத்தில் நிதி பெறுபவர்களுக்கு இந்நிவாரணம் வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு மீனவர்களுக்கு நிவாரண தொகை விரைவில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.