'பேஸ்புக்'கில் வந்த வேலைவாய்ப்பு தகவலை நம்பிரூ.15½ லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்


பேஸ்புக்கில் வந்த வேலைவாய்ப்பு தகவலை நம்பிரூ.15½ லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் வந்த வேலைவாய்ப்பு தொடர்பான தகவலை நம்பி தனியார் நிறுவன ஊழியர் ரூ.15½ லட்சத்தை இழந்தார்.

தேனி

தனியார் நிறுவன ஊழியர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி முத்துநகரை சேர்ந்த சென்ராம் மகன் ஆனந்தகுமார் (வயது 34). இவர் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி இவர் 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்த போது அதில் ஆன்லைனில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் வந்தது. அதை அவர் கிளிக் செய்தவுடன், அவருடைய செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.

அவர் தன்னை ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்தார். தங்களின் இணையதள பக்கத்தில் தனியாக பயனர் கணக்கு தொடங்கி, அதில் கொடுக்கப்படும் பணிகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அந்த நபர், ஆனந்தகுமாரிடம் ஆசை வார்த்தைகள் கூறினார்.

ஆர்டர் செய்தால் பணம்

அதை நம்பிய ஆனந்தகுமார், அந்த நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் சென்று பயனர் கணக்கு தொடங்கினார். அதன்பிறகு 'வாட்ஸ்-அப்' மூலம் தொடர்பு கொண்ட நபர், 'டெலிகிராம்' என்ற மற்றொரு செயலி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற்றம் செய்தார்.

இணையதளத்தில் காட்டும் பொருட்களின் விலைக்கு ஏற்ப தனது பயனர் கணக்கில் பணம் செலுத்தி, அந்த பொருட்களை ஆர்டர் செய்தால், ஏற்கனவே செலுத்திய பணம் லாபத்தோடு திரும்ப வரும் என்று கூறினார். அதை நம்பிய ஆனந்தகுமார் முதலில் சிறிய தொகையை செலுத்தி பொருட்களை ஆர்டர் செய்தார். அதற்கான பணம் அவருக்கு லாபத்துடன் வந்தது.

ரூ.15½ லட்சம் மோசடி

பின்னர் பல்வேறு தொகைக்கு வெவ்வேறு பொருட்களை ஆர்டர் செய்யுமாறு ஆன்லைன் மூலம் கூறினார். அதை நம்பி அவர் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தார். ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 188 வரை அவர் செலுத்திய நிலையில் அதற்கான லாபத்தொகையையோ, செலுத்திய பணத்தையோ திரும்ப பெற முடியவில்லை. இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவன நபர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் மீண்டும் பணம் பறிக்கும் வகையில் செயல்பட்டனர். இதையடுத்து ஆனந்தகுமார் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இந்த ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி வழக்குப்பதிவு செய்தார். இந்த மோசடிக்கு பயன்படுத்திய 'வாட்ஸ்-அப்' எண், இணையதள பக்கம் மற்றும் 63 வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை வைத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story