கடந்த காலங்களை நினைவு கூறும் வீட்டு திண்ணைகள்


கடந்த காலங்களை நினைவு கூறும் வீட்டு திண்ணைகள்
x

கடந்த காலங்களை நினைவு கூறும் வீட்டு திண்ணைகள்

திருப்பூர்

சேவூர்

கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் முதல் பெரியவர் வரை சற்று இளைப்பார, ஓய்வெடுக்க அனைத்து வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஓட்டுவீடுகளின் முன்பு அழகு சேர்ப்பதே திண்ணைதான். இது காலப்போக்கில் அழிந்து விட்டது. பாரம்பரியத்தின் ஆணிவேராக திகழ்ந்தது வீட்டு திண்ணை வீடுகள். கடந்த காலங்களில் தங்களது வசதிக்கு ஏற்றவாறு சிறிய வீடுகள் கட்டினாலும் முன்புறம் திண்ணை இல்லாமல் கட்டமாட்டார்கள். அப்போதெல்லாம் திண்ணைகள் இல்லாத வீடுகளை காண முடியாது. கிராமத்து மக்கள் தோட்டங்களில் வேலை செய்து விட்டு சற்று ஓய்வு எடுக்க திண்ணையை பயன்படுத்தினார்கள். குறிப்பாக வெயில் காலங்களில், இரவு நேரத்தில் காற்றோட்டமாக படுத்து உறங்க இந்த திண்ணையை பயன்படுத்தினர்.

காற்றோட்ட வசதி கொண்டது திண்ணை

பள்ளிக்குழந்தைகள் விடுமுறை நாட்களில், தாயம், பல்லாங்குழி, கேரம், சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட பல விளையாட்டுகளை சிறுவர், சிறுமியர்கள் இந்த திண்ணையில் அமர்ந்து விளையாடி வந்தனர். உறவினர்கள், நண்பர்கள், ஊர் பெரியவர்கள் என வீடு தேடி வருபவர்கள் சந்திக்க கூடிய இடமாகவும் இந்த திண்ணை இருந்தது. கிராம பகுதிகளில் வழிப்போக்கர்களும், வியாபாரிகளும், சற்று இளைப்பாறும் இடமாகவும் திண்ணை பயன்பட்டது. பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு அனைவரும் ஒன்று கூடி திண்ணைகளில் அமர்ந்து அவரவர் வீடுகளில் நடந்த சம்பவங்களை பேசுவதும் இந்த திண்ணையில் தான். கிராமங்களில் அனைவரது வாழ்விலும், இன்பம், துன்பம், கிண்டல், கேளி, நையாண்டி பேசுவது இந்த திண்ணையில் தான்.

நாகரிக காலம்

ஆனால் தற்போது நாகரிகம், நவீன காலம் என்று சொல்லி, திண்ணை வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திண்ணை இருந்த இடங்கள் கார் பார்க்கிங்காகவும் புது மாடல்களில் வீடுகள் கட்டுகிறார்கள். ஆனால் இன்று ஆண், பெண் அணியும் ஆடை முதல் அத்தனையும் சுருங்கிப்போனது.

இயற்கை காற்றோட்டத்துடன் திண்ணையில், பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், விளையாடிய குழந்தைகள் தற்போது குளிர்சாதன அறைகளில் செல்போனில் மூழ்கிக் கிடங்கின்றனர். பரபரப்பான நவீன காலத்தில் உட்கார நேரமில்லை. பேசவும் நேரமில்லை என சொல்லும் இக்காலத்தில் இன்னும் ஒரு சில கிராமங்களில் திண்ணை வீடுகள் காட்சியளிப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.



Next Story