கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்
கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.
கடலூர் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசியல் கட்சியினர் மற்றும் கடைக்காரர்கள் பேனர்கள் வைப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று கடலூர் மாநகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த 35 பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றினர்.
மேலும் இனி போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து அகற்றப்பட்ட பேனர் மற்றும் விளம்பர பதாகைகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதேபோல் கடலூர் பாரதி சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களையும் போலீசார் எச்சரித்தனர். மேலும் நடைபாதைகளில் இருந்த கடைகளையும் அகற்றினர். கடலூரில் பேனர் அகற்றப்பட்டதுடன், நடைபாதை கடைகளையும் போலீசார் அகற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.