அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட முள் கம்பி வேலி அகற்றம்
கெம்மங்குப்பம் கோவில் வளாகத்தில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட முள்கம்பி வேலி அகற்றப்பட்டது.
முள் கம்பி வேலி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் விநாயகர், கெங்கையம்மன், ஆஞ்சநேயர், முருகன், ஓம்சக்தி, நாக கன்னிகை கோவில்கள், குளம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, விளையாட்டு மைதானம், நெல்களம், காரியமேடை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த வளாகம் குப்பை கூளங்கள் இல்லாமல், தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக கோவில் வளாகத்தைச் சுற்றிலும் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கான செலவுகளை கிராமத்தின் ஒரு தரப்பினர் மட்டும் செய்திருந்தனர்.
இதற்கு எதிர் தரப்பினர் 'எங்களுக்குத் தெரியாமல் இந்த வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான செலவிலும் எங்கள் பங்களிப்பு இல்லை'. என்று ஆட்சேபணை தெரிவித்து தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
அமைதி குழு கூட்டம்
இதனால் தாலுகா அலுவலகத்தில் அமைதி குழுக்கூட்டம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், பிச்சாண்டி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தில் வேலி அமைத்தவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என இரு தரப்பினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பலமணி நேரம் பேசியும் இருதரப்பினரிடையே சுமுகமான முடிவு ஏற்படவில்லை. இதனால் தாசில்தார், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி இருதரப்பினரும் கலந்து கொண்ட இரண்டாவது சுற்று அமைதி குழு கூட்டம், குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் சமரசம் ஏற்படவில்லை.
அகற்றம்
விசாரணைக்கு பிறகு, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அரசுக்கு சொந்தமான கோவில் வளாக இடத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட முள் கம்பி வேலியை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் முள் கம்பி வேலிகள் மற்றும் அதற்காக நடப்பட்ட கம்பங்கள் ஆகியவை தாசில்தார் கீதா தலைமையில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகற்றப்பட்டன.