மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டிருந்த கான்கிரீட் கலவை அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டிருந்த கான்கிரீட் கலவை அகற்றப்பட்டுள்ளது.
பொறையாறு:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டிருந்த கான்கிரீட் கலவை அகற்றப்பட்டுள்ளது.
மகிமலை ஆறு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே அனந்தமங்கலம் கண்ணப்பமூலை மகிமலையாறு உள்ளது. இந்த ஆறு சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம், வேதாரண்யம் நான்கு வழி சாலைகளை இணைக்கும் பகுதியில் உள்ளது. இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத நபர்களால் கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டு ஆற்றின் உட்பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் கலவைகள் பரவி கிடைந்தது.
ஆற்றில் கான்கிரீட் கலவைகளை கொட்டிய நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற ஆறு,குளம், வாய்க்கால், உள்ளிட்ட நீர் ஆதாரங்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தினர்மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
இந்த செய்தி நேற்று தினத்தந்தி நாளிதழில் வெளியாகி இருந்தது. 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படி, மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் அறிவுரைபடி, செம்பனார்கோவில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜய பாஸ்கர் மேற்பார்வையில் மகிமை ஆற்றில் கொட்டப்பட்ட காங்கிரீட் கலவையை பொக்லின் எந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது.
இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.