ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
ஆக்கிரமிப்பு வீடுகள்
வாணியம்பாடி நகர பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்து வந்த திருநங்கைகளின் வீடுகளை சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் அகற்றி அங்கு வசித்து வந்த 32 திருநங்கைகளுக்கு, வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை அருகே உள்ள கனகமேடு பகுதியில் பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் சிலர் வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினர் சென்று அங்கு வசித்து வருபவர்களிடம் இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்றும், இந்த இடத்தில் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம்
ஆனால் அங்கு வசித்தவர்கள் காலி செய்யாததால், வருவாய்த் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் சென்று போலீஸ் பாதுகாப்புடன் அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் குடிசைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு அங்கு வசித்து வந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்த இடங்களை தனி நபர் ஒருவரிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து வாகியதாகவும், பட்டா வழங்கவில்லை என்றும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வீடுகள் அகற்றம்
மேலும் வருவாய்துறை அதிகாரிகளின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர். இருப்பினும் இந்த இடத்தில் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த இடங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வீடுகள் மற்றும் குடிசைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.