ஓசூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ஓசூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

ஓசூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்

ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதான சாலையில் இருந்து அரசனட்டிக்கு செல்லும் வழி மற்றும் சிப்காட் ஹவுசிங் காலனிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக பெட்டிக்கடைகள், சாலையோர சிறு ஓட்டல்கள், பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.

இதனால் இப்பகுதி மக்கள் அந்த சாலைகளில் சென்று வர மிகவும் அவதிப்பட்டனர். இதுஒருபுறம் இருக்க இந்த சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளன.

அகற்றம்

இந்த நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நேற்று அந்த பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் பிரபாகரன், குமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, 'ஓசூர் மாநகராட்சி பகுதியில், இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.


Next Story