கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

வேலூரில் கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.

வேலூர்

கழிவுநீர் கால்வாய்

வேலூர் மக்கான் அம்பேத்கர்நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து அந்தப் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அந்த பகுதியில் கழிவுநீர் செல்ல புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அம்பேத்கர்நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் சில வீடுகளில் ஒரு பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

23 வீடுகள்..

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

அம்பேத்கர் நகர் பகுதியில் மெயின் தெருவில் கழிவுநீர் செல்ல இருபுறமும் கால்வாய் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சுமார் 23 வீடுகளை அகற்றி உள்ளோம். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படும். அந்த பகுதியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story