சேலத்தில் சென்னப்பர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
சேலத்தில் சென்னப்பர் கோவில் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
சென்னப்பர் கோவில்
சேலம் சின்னகடை வீதி அரசமரப்பிள்ளையார் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்னப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து 5 ஓட்டு வீடுகளை கட்டி தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர். தற்போது வீடுகள் மிகவும் பாழடைந்து இருந்தது.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் தக்கார் கலைச்செல்வி முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது, 'பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய கோவில் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றி விரைவில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்கள்.