'தினத்தந்தி' புகார் பெட்டி செய்தி எதிரொலி: கிச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
‘தினத்தந்தி’ புகார் பெட்டி செய்தி எதிரொலியரக கிச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
சேலம்,
சேலம் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டதாலும், இதனால் அங்கு குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி-படம் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது.
இந்நிலையில், மாநகராட்சி நகர்நல அலுவலர் யோகானந் தலைமையில் செயற்பொறியாளர்கள் பழனிசாமி, திலகம், தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும், அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளையும் அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும், நகர்ப்புற சுகாதார நிலையம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.