அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அடுக்கம்பாறையில் திருவண்ணாமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவமனை வளாகம் முன்பு சிகிச்சை பெற வருபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வருபவர்களுக்கு வசதியாக மூஞ்சூர்பட்டு சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் துணிக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது.
கலெக்டர் உத்தரவு
இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன்உத்தரவின் பேரில், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயா, சாலை வருவாய் ஆய்வாளர் பலராமன், வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தாசில்தார் செந்தில், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை மருத்துவமனை வளாகத்தை ஒட்டி மூஞ்சூர்பட்டு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், செயல் அலுவலர் அர்ச்சுனன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர்.
இந்த நிலையில் ஒருபுறம் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து மருத்துவமனைக்கு எதிர் திசையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு 2 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் கடைகளை எடுக்காவிட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். கடைகள் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளவும், மாற்று இடம் தேர்வு செய்யவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு ஆஸ்பத்திரி முன்பு சாலை அகலமாக காட்சியளித்தது. இந்த இடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடை இல்லாமல் வைக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.